ராஜாவுக்கும் சுகந்திக்கும் கல்யாணம் ஆகி சுமார் ஒன்றரை வருடங்கள் இனிதே ஓடின.  இரண்டு ஆண்டுகள் சந்தோசமாக புதுமண வாழ்வை அனுபவித்த பிறகு குழந்தை பெற்று கொள்ள இருவரும் முடிவு செய்தனர்.  எப்ப விசேசம் என்று ஆறு மாதம் சென்ற பின்பு, மெதுவாக இருவர் வீட்டிலும் கேட்க ஆரம்பித்தனர்.  இந்த சமூகத்தில் திருமணம் என்பது இருமணம் சார்ந்த வாழ்க்கை முறை என்பதை தாண்டி தலைமுறை விருச்ச ஆணிவேரே இந்த திருமண பந்தம் என புரிய இருவருக்கும் ஒருவருடம்  ஆனது.

சுகந்தி கருவுறும் வரை அவள் மாமியாரும், நாத்தனாரும் அவளை குடும்ப உறுப்பினராவே ஏற்று கொள்ளவில்லை. ஒரு வருடம் கழித்து அவள் கருவுற்ற செய்தி கேட்ட பின்பு தான் மாமியாரும், நாத்தனாரும் சுகந்தியின் மீது பாச மழையை பொழிந்தனர்.  அப்போது தான் சுகந்தி தாய்மையின் அங்கீகாரம் மற்றும் தலைமுறை விருத்தி முக்கியத்துவத்தை உணர்ந்தா ள்.

இருவரும் எதிர்பார்த்த அந்த நாளும் நெருங்கியது, அது தான் சுகந்தியின் பிரசவ நாள், எல்லோரும் நல்ல படியாக தாயும், சேயும் பிறக்க பிராத்தனை செய்யும் போது சுகந்தியின் மாமியார் மட்டும் நல்ல அழகான ஆண் குழந்தை பிறக்க பிராத்தனை செய்தாள்.  ஆண்டவன் நமக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதை, யார் பிராத்தனை மூலம் மாற்ற முடியும்?? எதுவாக இருந்தாலும் அது ஆண்டவன் கொடுக்கும் பரிசு என்பது சுகந்தியுன் எண்ணம். இதில் இவர்கள் ஆண்டவனை வேறு தொந்தரவு செய்து கோரிக்கைகளை வைக்கிறார்கள் என எண்ணிகொண்டாள்.

சுகந்திக்கு விதிக்கப்பட்டதோ பெண் குழந்தை முதலில் மாமியார் ஒரு மாதிரியாக முகத்தை வைத்தாள், சுகந்தியின் மாமனார் தான் ஆதரவுகரத்தை முதலில் நீட்டினார், ஏன்னென்றால் பிறந்த குழந்தையின் நட்சத்திரமும், அவரின் அம்மாவின் நட்சத்திரமும் ஒன்றாக இருந்தது.  அதுமட்டுமில்லாமல் தனது பேத்திக்கு தனது அம்மா பெயர் வருகின்ற மாதிரி அமிர்தஸ்ரீ என்று பெயரும் அவரே வைத்தார்.  வேற வழியில்லாமல் மாமியார், நாத்தனார் அனைவரும் அமிர்தஸ்ரீயை ஏற்று கொண்டனர்.  பிரசவ வலி, மாமியார் நாத்தனார் குடசல்களை மறக்கவே சுகந்திக்கு சில வருடங்கள் ஓடின.   அமிர்தஸ்ரீ 2 வயதை கடந்தவுடன் மறுமடியும் மாமியார், நாத்தனார் அவர்களின் வேலைகளை ஆரம்பித்தனர்.  இன்னுமோர் பிள்ளை  பெற்றுகொடு அதுவும் ஆண் பிள்ளையாக என்று தினமும் ஜாடை மாடையாகவும், சில நேரங்களில் நேரிடையாகவும் கேட்க ஆரம்பித்தனர்.

சுகந்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, தினமும் இரவில் இருவரும் இதை பற்றியே தீவரமாக பேசினர், நம்ம தாத்தா பாட்டி காலத்தில் வீட்டுக்கு 12 பிள்ளைகள் என்பதுகூட சகஜமான விஷயமாக இருந்தது, ஆனால் இப்ப நம்ம அப்பா அம்மா தலைமுறையில் நான்கு முதல் இரண்டு குழந்தைகளாக குறைந்துவிட்டது.  இப்ப நம்ம காலத்தில் இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒன்றை வளர்ப்பதே பெரிய விஷயம் என்று நினைக்கும் படி உள்ளது.

ராஜாவுக்கு இன்னொரு குழந்தை பெற்றுகொள்ள கொஞ்சம் கூடவிருப்பமில்லை.  அவன் எல்லாதுக்கும் பேப்பர்ல கணக்கு எழுதியே பேனா மையை காலி செய்பவன், அவன் இன்னொரு குழந்தை என்றவுடன் இரண்டு வருடமாக செலவு செய்த பால்பவுடர் தான் அவன் நினைவுக்கு முதலில் வந்தது.  வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்தான்.

பிரச்சனை முற்றி கொண்டே போனது, பாசமாக இருந்த மாமியார் மருமகள் இப்ப வீட்டில் பேசுவது கிடையாது, நாத்தனாரும் அப்படியே.  இவளுக்கு எப்போதும் ஆதரவு கரம் நீட்டும் மாமனாரும் ஒரு மருந்துக்கு கூட சுகந்திக்கு ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை.   ஏதோ குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழ்ந்தது போல ஒரு மயானஅமைதி நாள் முழுவதும் நிலவியது.

பிறகு மாமியாரும், மாமனாரும் கொஞ்சம் கொஞ்சமாக அமிர்தஸ்ரீயிடம் இருந்தும் விலக ஆரம்பித்தனர்.   இப்போது தான் இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது.

ராஜா ஒரு நாள் மாலையில் அவன் அப்பா செல்லும் பார்க்கிற்கு சென்றான், அங்கு அவன் அப்பா அப்பொழுது அவர் நண்பருடன் நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். ராஜாவை பார்த்தவுடன் இருவரும் குசலம் விசாரித்துவிட்டு அவர்களது நடை பயிற்சியில் கவனத்தை திருப்பினர்.  ராஜா பொறுமையிழந்து அவர்கள் நடை பயிற்சியையும், குழந்தைகள் விளையாடுவதையும் பார்த்துகொண்டு இருந்தான்.   எல்லா பிள்ளைகளும் இந்த உலகத்தை மறந்து சந்தோசமாக விளையாடி கொண்டு இருந்தனர்.  ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் மற்ற குழந்தைகளுடன் விட்டு கொடுத்து  விளையாடுவதையும் பார்த்தான்.

அப்பா நடைபயற்சி முடித்தவுடன் அவரிடம் சென்று, ஏன் இன்னொரு பிள்ளை பெற்று கொள்ளாதற்கு எங்களுடன் நீங்கள் பழகாமல் விலகுகிறீர்கள் என்று கேட்டான்.

ராஜா உனக்கு அப்பறம் நம்ம தாத்தா விசுவநாதன் தலைமுறை முடித்து போக கூடாது, அதற்கு தான் நான் கொஞ்சம் கடுமையாக இருக்கேன்.  உங்க சித்தப்பாவுக்கு இரண்டும் பெண் பிள்ளைகள், உங்க பெரியப்பாவிற்கும் நான்கும் பெண் பிள்ளைகள், எனக்கு மட்டும் தான் நீ ஒரு ஆண் பிள்ளை, இப்ப நீயும் ஒத்த பெண் பிள்ளையோடு நிறுத்திவிட்டால் நம்ம தலைமுறை எப்படி விருச்சம் அடையும், என் கண் முன்னே நம் தலைமுறை வேர் அழிவதை எப்படி என்னால் தாங்கிக்கொள்ள முடியும் என்று கூறிவிட்டு கண்ணீரை துடைத்தார்.  நம்ம குலம் விருத்தி அடைவது உன் கைகளில் மட்டும் தான் உள்ளது, யோசித்து ஒரு நல்ல முடிவு எடு என்று சொன்னார்.

இதில் யோசிக்க என்ன இருக்கிறது அப்பா, எந்த குழந்தை பிறக்கும் என்பது என் கையிலோ அல்லது சுகந்தி கையிலோ இல்லை.  இந்த  கம்ப்யூட்டர் காலத்தில் போய் ஆண் பிள்ளை வேண்டும் என்பது ஒரு மடத்தனம், என்னை பொருத்தவரை ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ இரண்டுமே குடும்ப சொத்தும் வாரிசும் கூட. இந்த பார்க் வந்த பிறகு தான்  எனக்கு ஒன்னு மட்டும் புரிந்தது, அமிர்தஸ்ரீ கூட விளையாட ஒரு குழந்தை அவசியம் என்று, அவளுக்காக நான் ஒரு குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்துவிட்டேன், அவளும் எத்தனை நாள் தான் உங்களிடம் அன்பை எதிர்பார்த்து காத்து கிடக்க முடியும், அவளுக்கும் இங்கு உள்ள சிறுவர்கள் போல வீட்டில் விளையாட ஒரு குழந்தை வேண்டும் என தீர்க்கமாக சொன்னான்.  ராஜாவின் அப்பா ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தார்.

ராஜா பால்பவுடர் கணக்கு எதுவும் மனசில் போடாமல் கடைத்தெருவுக்கு சென்று அல்வாவும் மல்லிகைபூவும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தான், அவன் கையில் உள்ள அல்வா மற்றும் மல்லிகைப்பூவை பார்த்து ராஜாவின் அப்பா சந்தோசப்பட்டார்.

 

Share This Book