சங்கர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு இரண்டு வருடம் கழித்து சொந்த ஊருக்கு வரும் சந்தோஷத்தில் ஒரு வாரமாக சரியாக தூங்கவில்லை, சாப்பிடவில்லை, தினமும் இந்த இரண்டு வருட வாழ்க்கையை கண் முன்னே நினைத்து கொண்டான்.  இவன் வெளிநாட்டிற்கு வரும் போது சந்தோசமாக வரவில்லை, இவன் தங்கச்சி கல்யாணம் மற்றும் இவன் கல்யாணத்திற்கு வாங்கிய கடன்தான் இவனை இங்கு கூட்டி வந்தது.  கல்யாணம் ஆன ஒன்றரை வருடத்தில் இங்கு வந்து விட்டான்; இவன் ஊரில் இருந்து கிளம்பும் போது இவன் மகளிற்கு 2 மாதம். பெற்ற மகள் வளர்ச்சியை கூட தொலைபேசி மூலம் தான் தெரிந்து கொண்டான்.

தினமும் சாப்பிடும் போது எல்லாம் வீட்டை பற்றி நினைத்து கொள்வான், ஏன் என்றால் இவன் எதையும் கழிக்காமல் சாப்பிடும் பழக்கம் இல்லாதவன். காய்கறிகளில் பல சாப்பிடமாட்டன், வெளிநாட்டிற்கு வந்து இங்கு கிடைக்கும் சாப்பாட்டுக்கு இவன் உடம்பு ஒத்துழைக்கவே ஆறு மாதம் ஆனது.

தினமும் அலுவலகம் முடித்து வந்தவுடன் இவன் மனைவி இந்திராவிடம் தொலைபேசியில் பேசுவான், பிறகு அம்மாவிற்கு மற்றும் சில நாட்களில் தங்கைக்கும் கூட பேசுவான்.

ஊருக்கு போகும் காரணத்தினால் அதிக நேரம் அனைவரிடமும் தொலைபேசியில் பேசினான். அம்மாவிடம் கேட்டான் அம்மா வரும் போது உங்களுக்கு என்ன வாங்கி வர என்று, அதற்கு சங்கரின் அம்மா எனக்கு ஒன்றும் வேண்டாம்; வரும் போது எதாவது உன் தங்கச்சிக்கும், மாப்பிள்ளைக்கும் வாங்கி வா என்று மட்டும் சொன்னாள்.

இல்லமா எதாவது கேள் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்த, இறுதியாக இவன் அம்மா வரும் போது எனக்கு ஒரு சால்வை வாங்கிவா அது எனக்கு போதும் என்று சொன்னாள்.    கண்டிப்பா வரும் போது ஒரு நல்ல சால்வை வாங்கி வருகிறேன் என்று கூறினான்.

அடுத்து தங்கையுடன் தொலைபேசியில் பேசினான், மாப்பிள்ளை மற்றும் மருமகன் பற்றி முதலில் விசாரித்து விட்டு, ஊருக்கு வரும் தகவலை சொன்னான்.  தங்கை முதலில் எத்தனை நாள் இங்க இருப்ப அண்ணா என்று கேட்டாள்?

இல்லமா; இனிமேல் இங்க வந்து கஷ்ட பட விருப்பம் இல்லை; அங்க கடலூரில் ஏதாவது ஒரு வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றினா போதும் என நினைக்கிறேன்.

ஆம்மாம், நீ அங்க போய் சம்பாதிப்பதை இங்கேயே அண்ணி, குழந்தைகளுடன் இருந்து சம்பாதித்தால் போதும் அண்ணா என்று கூறினாள்.

சரிம்மா வரும் போது மருமகனுக்கு என்ன வாங்கி வர என்று கேட்டான்?

அண்ணா நீ வரும் போது அவனுக்கு ஒரு கார் வாங்கி வா, எப்ப பார்த்தாலும் அவன் கார் வச்சி தான் விளையாடுகிறான்.

சரிம்மா கண்டிப்பா வாங்கிவரேன், உனக்கும் மாப்பிள்ளைக்கும் வரும் போது என்ன வாங்கி வர?

எனக்கு ஒன்னும் வேண்டாம், அவருக்கு மட்டும் ஏதாவது உனக்கு தெரிஞ்சது வாங்கி வா அது போதும்.

சரிம்மா? நான் வரும் வெள்ளி கிழமை இரவு ஊருக்கு வந்து விடுவேன், வந்து நேரில் மிச்ச விசயத்தை பற்றி பேசலாம் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

அடுத்து வழக்கம் போல தன் மனைவி இந்திராவுக்கு போன் செய்தான்,  அவளிடம் வழக்கம் போல நலம் விசாரித்துவிட்டு வரும் வெள்ளிகிழமை இரவு நான் ஊருக்கு வருகிறேன் என்று கூறினான். அடுத்த சில நிமிடங்கள் மிகவும் மௌனமாக இருந்தது. பிறகு முட்டையில் இருந்து வரும் குஞ்சை போல சிறுது அழுகை சத்தம்  மட்டும் இந்திராவிடம் இருந்து வந்தது.  நான் தான் அடுத்த வாரம் வந்து விடுவேன், இனிமேல் உன்னை  விட்டு எங்கேயும் போவதும் இல்லை என்று சமாதானம் கூறினான்.  அவள் சிறிது நேரம் கழித்து பிறகு சமாதானம் ஆகி இயல்பாக பேச ஆரம்பித்தாள்.

வரும் போது உனக்கு என்ன வாங்கி வர என கேட்டான். அதற்கு அவள் இந்த இரண்டு வருடம் நீங்கள் தொலைத்த அந்த இளமையை வரும் போது வாங்கி வர சொன்னாள்.  இதை கேட்டவுடன் சங்கருக்கு அழுகை வந்தது, அழுகையில் வார்த்தை வராமல் மௌனமாக இருந்தான்.

இல்லங்க சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன், உங்க கஷ்டம் எனக்கு தெரியாதா என்ன? ஒவ்வொரு இரவுகளையும் ஒரு யுகமாக நீங்க கடத்தியது, ஆமா கண்ணம்மா?  சில நேரம் இவன் மனைவியை செல்லமாக கண்ணம்மா என்று அழைப்பான்.   எப்படியோ இந்த இரண்டு வருடம் தலையணையுடன் வாழ்க்கை  நடத்திவிட்டேன் என்று கூறினான். இதில் ஒரு நன்மையும் உள்ளது, அந்த மூன்று  நாள் விலக்கு  தலையணைக்கு கிடையாது மற்றும் ஒவ்வொரு நாளும் விடியும் வரை என் கூடவே இருக்கும் என்றும் கூறினான்.  சரி வரும் போது மறக்காமல் அந்த தலையணையை கொண்டு வாருங்கள் என கூறினாள்.

அது தான் என் நெஞ்சம் அங்கு இருக்கும் போது மஞ்சத்திற்கு தலையணை தேவையா? என்று மறுகேள்வி கேட்டான்.  இருவரும் இப்படியே வெகு நேரம் பேசிக்கொண்டே இருந்தனர்.  இறுதியாக ஊருக்கு வரும் போது என்ன வாங்கி வர என மீண்டும் கேட்டான். நீங்கள் என்ன பொருள் வாங்கி வந்தாலும்; என் விழி பார்த்து, கைகோர்த்து உங்கள்  மூச்சுக்காற்றை நான் உணர்ந்து நீங்கள்  தரும் ஒற்றை நெற்றி முத்தத்தை விட சிறந்த பொருள்  ஒன்று இருந்தால் வாங்கி வர சொன்னாள்.

கண்டிப்பா  வந்து தருகிறேன் அந்த முத்தத்தை உனக்கு பரிசாக, பதிலுக்கு நீ என்ன தருவாய் என கேட்டான். என் ஆயுள் மொத்தத்தின் காதல் நினைவாக உங்களுக்கு  பிடித்த ஈரமுத்தத்தை கோழி கூவும் வரை தருவேன் என்று கூரினாள்.  இறுதியாக தொலைபேசி வழியாக ஒரு அதிர்வு முத்தத்தை தந்து இணைப்பை துண்டித்தாள்.  இவன் அந்த அதிர்ச்சி முத்தத்தால் இரவு தூங்கினான்.

மறு நாள் அலுவலகம் சென்று தனது கணக்கு வழக்கு எல்லாம் முடித்து விட்டு கை நிறைய பணம் வாங்கி விட்டு சில நிமிடம் பேசாமல் அந்த பணத்தையும் அவன் இந்த இரண்டு வருடம் இழந்த வாழ்க்கையை மனதராசில் நிறுத்தி எடை போட்டான், முள் இழந்த வாழ்க்கை பக்கமே நின்றது.  மனசை சமாதானம் செய்து கொண்டு விமான டிக்கெட் வாங்கி கொண்டு அலுவலகம் முடித்து வெளியே வந்து அலுவலகத்தை ஒரு முறை பார்த்து விட்டு வெளியே வந்தான். பணத்தை எல்லாம் அவன் அப்பாவிற்கு அனுப்பி விட்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தான்.

இரவு இந்திராவிடம் மறுபடியும் வெகு நேரம் பேசிக்கொண்டு கடைசியாக தன் தலையாணியுடன் தூங்க சென்றான்.  அவள் தரும் ஈரமுத்தத்தை நினைத்து நினைத்து புரண்டு புரண்டு தூங்கினான். மறு நாள் சிறு பிள்ளை திருவிழாவுக்கு கிளம்புவது போல வேகமாக எழுந்து விமான நிலையத்தை அடைந்தான்.   டிக்கெட் வாங்கி கொண்டு கவுண்டர் அருகில் நின்று கொண்டு இந்திராவிடம் மறுபடியும் பேசினான்.  அவள் எப்ப இங்க வருவிங்க என்று  கேட்டாள்.  சரியாக 4 மணிக்கு வந்து விடுவேன் என்று கூறினான்.

மகன் வருவதை எண்ணி அவள் அம்மா மகனுக்கு பிடித்த நாட்டுக்கோழி வாங்கினாள், கடைகாரர் என்னம்மா வெள்ளிகிழமை அதுவுமாக கவுச்சி குழம்பு என்று கேட்டான், என் மகன் இன்று வருகிறான் என்று கூறினாள்.  அவன் குடும்பமே அவன் வருகையே எதிர் பார்த்து இருந்தனர்.

இந்திரா இரண்டு வருடம் கழித்து வரும் தன் கணவனுக்கு தன்னையே ஒரு பரிசாக தர தயாராக இருந்தாள்.  காலையிலே மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்தாள்.  மொத்தத்தில் அவன் குடும்பமே ஒரு தீபாவளி, ஒரு பொங்கலை எதிர் பார்ப்பதை போல காத்திருந்தனர்.

சூரியன் மறைந்தும் சங்கர் வரவில்லை, மெல்ல இருள் வர தொடங்கியது ஊரில் மட்டும் இல்லை, இவன் இன்னும் வராமல் வீட்டிலும் தான்.  எதிர்பாராத ஒரு விபத்தில் அவன் வந்த விமானம் கடலில் மூழ்கியது.  இதை கேட்டதும் இவன் குடும்பம் மட்டும்மில்லாமல் அந்த ஊரே கண்ணீரில் மூழ்கியது.   அவன் வரும் முன் அவன் அனுப்பிய பணம் மட்டும் வந்தது.

அவனுக்காக வைத்த நாட்டுக்கோழி குழம்பு வாசனை அவன் நுகராமல் வீடெல்லாம் வீசியது. இவன் மருமகனுக்கு வாங்கி வந்த கார் வரவில்லை, கார் வாங்கியவனும் வரவில்லை.

இந்திரா கேட்ட தலையாணியும் வரவில்லை, ஆனால் அவள் பரிசாக தர இருந்த ஈர முத்தம் மட்டும் அவளிடம் இருந்தது.  ஈர முத்தம் வாங்காமலே காற்றுடன் கலந்தான்.  அவன் கடைசியாக கேட்ட அந்த ஈரமுத்தங்கள் மட்டும் ஈரமில்லாமல் அவள் இதழுடன் இருக்கிறது.

இந்திரா வள்ளுவன் சொன்னது போல;

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின்.

Share This Book