காவ்யா எழுந்திரு, நான் உனக்காக எவ்வளவு நேரம் காபி வைத்து கொண்டு காத்து கொண்டு இருக்கேன் தெரியுமா?  சண்டே அதுவுமா என்ன ஏழு மணி வரை தூக்கம்.  நேற்று நைட் சரக்கு அடித்த நானே கலையில் 6 மணிக்கு எழுந்து, பால் டிப்போ வரை சென்று  பால் வாங்கி வந்து காபி போட்டு முடித்து விட்டேன், உனக்கு என்ன தூக்கம்.

ஏன் ராகவா சண்டே ஒரு நாள் தான் கொஞ்சம் 10 மணி வரை தூங்க முடியும் அதுவும் உனக்கு பிடிக்கவில்லையா??  தினமும் காலையில் 7 மணிக்கே எழுந்து வேகமாக ஆபீஸ் போக வேண்டியுள்ளது, இந்த ஒரு நாள் கொஞ்சம் தொல்லை பண்ணாம இரு  என்று சொன்னாள்.

சரி நீ நல்லா தூங்கு மதியம் உனக்கு நான் இன்று என்ன சமைக்க என்று கேட்டான், வழக்கம் போல நீ காரம் அதிகம் இல்லாமல் வைக்கும் சிக்கன் செட்டிநாடு வை என்று சொல்லி விட்டு மறுபடியும் உறக்கத்திற்கு சென்றாள்.

ராகவன் வெளியே சென்று சிக்கன் வாங்கி வந்து வைத்து விட்டு, அவளை மெதுவாக எழுப்பினான்.  அவள் அப்போது  தான் கொஞ்சம் உறக்கத்தில் இருந்து எழுந்தாள்;  சிக்கன் வாசனை இப்பவே இழுக்குது என்று சொல்லி விட்டு  குளிக்க சென்றாள், ராகவன் பின்னாடியே சென்று பாத்ரூம் வாசலில் நின்று கொண்டு நானும் உள்ளே வரவா என்று கேட்டான்,

அவள் எதற்கு என்று கேட்டாள், சும்மா சோப்பு போடத்தான் என்று கூறினான்.  ஒன்னும் வேண்டாம் என்னக்கு சோப்பு போட தெரியும் என்று கூறிவிட்டாள்.  அவள் குளித்து முடித்தவுடன், நல்ல ஒரு சாப்பாட்டை அவளுக்கு பரிமாறினான்.  சாப்பிட்டு முடித்து விட்டு மதியம் நம்ம இரண்டு பேறும் ஒரு படத்துக்கு  போகலாம் என்று சொல்லி விட்டு, இன்டர்நெட்-ல் தேடி பிடித்து இரண்டு  டிக்கெட் சத்யம் தியேட்டர்லில் புக் செய்தான்.

3 மணிக்கு தனது பைக் ஸ்டார்ட் செய்தான், எதிர் விட்டு அம்மா, ராகவா என்ன லீவு அன்றுமா வெளிய கிளம்பிட்ட என்று கேட்டாள்? இல்ல சும்மாதான் என் பொண்டாட்டியை ஒரு சினிமாவுக்கு கூட்டிபோறேன் என்று சொல்லி விட்டு, இரு காவ்யா என்று சொல்லி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

எதிர் விட்டு அம்மா ஒரு சின்ன அழுகையுடன் இவனை கடந்து சென்றார்கள்,

காவ்யா; இந்த அம்மா எப்ப நான் வண்டியை ஸ்டார்ட் செய்து வெளியே கிளம்பும் போது என்னை பார்த்து அழுகிறார்கள், ஏன் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு வண்டியின் வேகத்தை கூட்டினான்.

ஏய் இடுப்பில் இருந்து முதலில் உன் கையை எடு, எனக்கு ஓட்ட கஷ்டமா இருக்கு இல்ல; நாம் இரண்டு பேரும் எங்கயாவது விழுந்து விடுவோம்; சொன்னா கேளு காவ்யா ப்ளீஸ் காவ்யா என்று சொல்லி கொண்டே  ஒரு வழியாக சத்யம் தியேட்டர் வந்து அடைந்தான்.

ஏற்கனவே இன்டர்நெட்டில் தேடி பிடித்து ஒரு கார்னர் சீட் புக் செய்து இருந்தான், படம் முடியும் வரை அவள் பேசாமல் படத்தில் முழு கவனத்தோடு இருந்தாள், ஆனால் இவன் அவளிடம் மொத்த சில்மிசத்தை காட்டி கொண்டு இருந்தான்.

படம் முடித்தவுடன் இருவரும் புறப்பட்டு வீட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.  குளிரில் அவள் இவனை கட்டிகொண்டதால் ராகவன்  வண்டி ஓட்ட தடுமாறினான்.

ஒரு வழியாக வீட்டை வந்து அடைந்தான். வழக்கம் போல அந்த அம்மா வெளியில் தான் உட்கார்ந்து இருந்தது, என்னமா சாப்பிட்டாசா என்று கேட்டு கொண்டு காவ்யா என்ன இருந்தாலும் அந்த படத்தோட முடிவை மட்டும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை, அந்த டைரக்டர் ஏதோ புதுசா செய்ய முடிவு செய்து உயிருக்கு உயிரா காதலிச்ச அந்த இருவரையும் படத்தின் முடிவில் பிரித்து வைத்து இருக்ககூடாது, என்று சொல்லி கொண்டே கதவை திறந்தான்.

மறுநாள் காலையில் வேலைக்கு போகும் போது கதவை மூடிவிட்டு மாடி படியில் இருந்து இறங்கினான்.

என்னப்பா ராகவா வேலைக்கு கிளம்பியாச்சா என்று அந்த அம்மா கேட்டது, அதற்க்கு ஆம்மாம், காவ்யாவுக்கு தான் கொஞ்சம் உடம்பு சரியில்லை, கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

அவன் சென்றவுடன் அந்த அம்மா வீட்டில் உள்ள கருமாரி படத்தின் முன்பு சென்று ஏன் இப்படி அந்த பையனை சித்திரவதை செய்கிறாய், அந்த பொண்ணு விபத்தில் இறக்கும் போதே இவன் உயிரையும் எடுத்து இருக்கலாமே என்று ஓவென அழுதாள்.

ஆம் காவ்யா இறந்து ஆறு மாதம் ஆகிவிட்டது.


 

Share This Book