ரவி தனது நண்பர்களுடன் ஷாப்பிங் மால் சென்றான், நண்பர்கள் அங்கு சென்றவுடன் ஒரு மொக்க படத்துக்கு போக எண்ணினார்கள், இவன் வர மறுத்து விட்டான்.  ஏற்கனவே அந்த மொக்க படத்தை நான் பார்த்துவிட்டேன், மறுபடியும் பார்ப்பது என்பது தெரிந்தே தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு சமம் என்று சொல்லிவிட்டு நான் இங்கேயே கொஞ்ச நேரம் சுற்றி கொண்டு இருக்கேன், மதியம் எல்லோரும் சேர்ந்து சாப்பிட போகலாம் என்று சொன்னான், அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு படம் பார்க்க சென்றனர்.  முதலில் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு, ஒரு பர்கர் மற்றும் கோக் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் ஒரு துணிக்கடையில் நுழைந்தான்.

கடைக்குள் சென்றவுடன்  ஒரு பிங்க் நிற சுடிதார் அவனை மிகவும் ஈர்த்தது, காரணம் அந்த பிங்க் நிற சுடிதாருடன் இவனுக்கு ஒரு பந்தமும், ஒரு கொசுவர்த்தி சுருள் போல ஒரு மெல்லிய வண்ண கதையும் உள்ளது.

ரவியின் முன்னாள் காதலி திவ்யாவிற்கு பிங்க் நிறம் என்றால் மிகவும் பிடிக்கும்.  இருவரும் கல்லூரியில்  படிக்கும் போதே காதலித்தனர்.  பிறகு இருவரும் இந்த பெங்களூரில்  ஒரே கம்பெனியில் தான் வேலை பார்த்தனர், அப்பவும் இருவரும் காதலித்தனர்.  ஆனால் இருவரும் ஒரே மாதிரியான சம்பளத்தில் வேலை பார்த்தனர்.  திவ்யா கொஞ்சம் நல்ல வாழ்க்கை தரத்துடன் வாழ நினைத்தாள், இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் சிறு சிறு சண்டைகளும் நடந்தது. அப்பொழுது ரவியின் பொருளாதாரம் கொஞ்சம் தாழ்ந்து இருந்தது, திவ்யா எந்த நேரமும் பணம் மற்றும் ரவியின் வசதியை பற்றி ஒப்பீடு செய்து பேசுவது ரவிக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, ஆனாலும் அவன் காதலை இழக்க தயராகவும்  இல்லை, மனதார காதலித்தான்; ஏனென்றால் இவன் மனதில் திவ்யா ஒரு பேரழகி.

ஆம் திவ்யா ஒரு பேரழகி தான், நல்ல எலுமிச்சை கலர், அழகான மற்றும் நீளமான கூந்தல், வசீகரிக்கும் புன்னகை,  இஞ்சி இடையழகு, அளவான ஒப்பனை அடிக்கடி பேசும் நுனி நாக்கு இங்கிலீஷ் இது எல்லாம் சேர்ந்து அவளை ஒரு பேரழகியாக தான் காட்டியது.

பேரழகி திவ்யாவிடம் இருந்து ஒரு நாள் இவனுக்கு பேரதிர்ச்சி  வந்தது,  காலையில் ஆபீஸ் வந்ததும் இவனிடம் தனது கல்யாண பத்திரிக்கையை தந்தாள்.  இவன் வாங்கி பார்த்தவுடன் சினிமாவில் பார்ப்பது போல பல மின்னல்களும், இடியும் இவன் இதயத்தை தாக்கியது போல உணர்ந்தான்.  எதுவும் பேசாமல் பத்திரிக்கையை வாங்கி கொண்டு மாலையில் உன் கூட கொஞ்சம் நேரம் பேச வேண்டும் என்று மட்டும் கூறினான். அவள் அதற்கு சரி, நாம் வழக்கம் போல சந்திக்கும் பீச் ரெஸ்டாரன்ட் வந்துவிடு என்று சொல்லி விட்டு சென்றுவிட்டாள்.

மாலையில் அவள் வந்தவுடன், ஏன் இந்த முடிவு என்று கேட்டான்.  நீ நல்ல சம்பளம் வாங்கவில்லை, கல்யாணத்திற்கு  பிறகு நான் வேலைக்கு வர விருப்பமில்லை.  நீ வாங்கும் சம்பளத்தில் எனது கனவுகளுக்கு நீர் ஊற்ற முடியாது, அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன் என்று கூறினாள்.  இவன் பதில் ஏதும் கூறாமல் இருந்தான், அவளே மறுபடியும் தொடர்ந்தாள், நீ மட்டும் உனக்கு வரக்கூடிய மனைவி நல்ல அழகான பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது நானும் அவர் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தது தப்பு இல்லை என்றும் நாம் நல்ல நண்பர்களா இருப்போம் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அந்த வேதனையில் குடிக்கவும் புகைக்கவும் ஆரம்பித்தான், அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறி பல கம்பெனி மாறினான். சம்பளம் மட்டுமில்லை ரவியின் வயதும் ஏறியது, ஒருவழியாக அவன் குடும்பத்தாரின் தொடர் நச்சரிப்புகளுக்கு முடிவாக 33 வயதில் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தான்.

இவன் எதிர்பார்த்த அளவுக்கு எந்த வரணும் அமையவில்லை, இறுதியில் ஒரு கிராமத்து பட்டதாரியான ஒரு பெண்ணை ரவியின் வீட்டில் முடிவு செய்தார்கள்.  இறுதியில் வேண் டா விருப்பாக ரவியும் சம்மதம் தெரிவித்தான்.   ரவியின் மனைவி  ஒன்றும் அவ்வளவு கலர் இல்லை, நுனி நாக்கு ஆங்கிலமும் இல்லை,  நீள கூந்தலும் இல்லை, எப்பொழுதும் மிடுக்கான உடைகள் உடுத்துவதும் இல்லை.  எப்பொழுது வீட்டிற்கு சென்றலும் ஒரு நைட்டி அல்லது சீலையை இடுப்பில் ஏற்றி கட்டி அடுப்படியில் வேலை செய்வது என இருப்பாள்.  ஆனால் ரவியிடம் எந்த ஒரு சண்டையும் போடாமாட்டாள். ரவி வாரம்  ஒருமுறை வீட்டில் வைத்தே குடிக்கவும், புகைக்கவும் செய்வான், அவள் ஒரு வார்த்தை கூட கேட்கமாட்டாள்.  ஒவ்வொரு நாளும் ரவிக்கு பிடித்த உணவுகளை சமைத்தும், இரவில் தன்னையே பரிமாறியும் அவனை சந்தோசமாக வைக்க முற்பட்டாள், ஆனால் ரவியின் மனதில் அவள் எந்த ஒரு தாக்கத்தையும் எற்படுத்தவில்லை.

ஒருவழியாக வருடங்கள் ஓடின, இவன் மறுபடியும் பெங்களூரில் வேலை கிடைத்து வந்தான்,  ஆனால் ரவி இன்னுமும் அவன் மனைவி  மற்றும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வது கிடையாது.   எப்பொழுதும் தனியாக நண்பர்களுடன் தான் வாரவிடுமுறைகளை களி(ழி)ப்பான், தனது மனைவிக்கு வெளியே தனியாக செல்ல அனுமதியும் காசும் மட்டும் கொடுத்துவிடுவான்.

ஒரு வழியாக சுருள் படம் முடிந்தது, இவன் ஒவ்வொரு சுடிதாரா  பார்த்துகொண்டு இருக்கும் போது ஒரு பெரிய உருவம் இவன் தோளில் தட்டி ரவி நீ எப்படி பெங்களூர்? என்று கேட்டது.

இவனுக்கு மிகவும் பழக்கமான குரல் ஆனால் உருவம் பொருந்தாத காரணத்தினால் சில நிமிடம் பேசாமல் நின்றான்.  என்ன ரவி யாபகம் இல்லை நான் தான் உன் திவ்யா என்று அவள் சொல்ல. நீ கொஞ்சம் சதை போட்டதால் அடையாளம் தெரியவில்லை என்று சொன்னான்.

மனதிற்குள் நீ என் திவ்யா இல்லை, பொதிமுட்டை திவ்யா என்று மட்டும் சொல்லிகொண்டான்.

ஆமா ரவி வீட்டில்  வேற வேலை இல்லை; அதனால் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி விடுவேன், அது தான் கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டேன்.

இதுவா கொஞ்சம் வெயிட்; பேரழகி திவ்யாவை, பொதிமுட்டை  திவ்யாவுடன் மனதிற்குள் ஒரு ஒப்பீடு செய்தான், நல்ல வேலை நான் தப்பிச்சேன் என்றும் நினைத்து கொண்டான்.

இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை  பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர், அவள் விடைபெறும் போது இந்த பணக்கார வாழ்க்கை எனக்கு மிகவும் சலிப்பாக உள்ளது என்று சொன்னாள், இவன் அதை பற்றி எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகை தந்து விட்டு மறுபடியும் சுடிதார் பார்க்க முடிவு செய்தான்.

இப்பொழுது மறுபடியும் அந்த பிங்க் நிற சுடிதார் பார்த்து வாய் விட்டு சிரித்தான்.

அவள் மனைவிக்கு  ஒரு சந்தன நிறத்தில் ஒரு சுடிதார் தேர்வு செய்து கற்பனை செய்து பார்த்தான், இப்பொழுது ரவியின் மனைவி ஒரு பேரழகியாக  தெரிந்தாள், நம்ம குடிப்பதை பற்றி ஒன்னும் கேட்பது இல்லை, கோபப்பட்டு திட்டும் போதும் ஒரு வார்த்தை மறுத்து பேசுவது இல்லை, எங்கேயும் வெளியே அவளை அழைத்து செல்வதும் இல்லை,  தனக்கு வேண்டியதை சரியான நேரத்தில் தருவது, கல்யாணமாகி இரண்டு பிள்ளை பெற்றபின்னரும் இன்னும் வெயிட் போடாமல், வீட்டு வேலை எல்லாம்  செய்து குழந்தைகளையும்  நன்றாக பராமரித்து கொள்ளும் தனது  மனைவி ஒரு பேரழகி என்று முடிவு செய்து நண்பர்கள் வருகைக்காக காத்து இருக்காமல்,  புறஅழகை விட அக அழகே முக்கியம் என நினைத்து, புது சுடிதாருடன் வீட்டிற்கு விரைந்தான் தன் பேரழகியை காண.

Share This Book