ரயிலை பிடிப்பதற்க்கு சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒரு வழியாக கஷ்டப்பட்டு எக்மோர் வந்து சேர்ந்தேன்; தற்செயலாக  போன் செய்யலாம் என்று நினைத்து எடுத்து பார்த்தால் 15 மிஸ்டு கால் இருந்தது.  உடனே வீட்டிற்கு போன் செய்தேன், எனக்கு பையன் பிறந்திருப்பதாக மாமனார் சொன்னார், உடனே மஞ்சுளா எப்படி இருக்கா மாமா என்று கேட்டேன்.  இருவரும் நலம், நீங்கள் பயப்படாமல் வாருங்கள் என்று மட்டும் சொன்னார்.  உடனே அருகில் உள்ள அடையார் ஆனந்தபவன் சென்று நிறைய சாக்லேட் மற்றும் சுவீட் வாங்கி கொண்டு ரயில் நிற்கும் பிளாட் பாரத்தை அடைந்தேன்.

ஒரு சில நிமிடங்களில் ரயிலும் வந்தது, உடனே ஒரு சிறுவனை போல ஆசைப்பட்டு  ஏறி  சீட்டில் அமர்ந்தேன்.  உடனே போன் மூலம் எனக்கு குழந்தை பிறந்ததையும், ஏதோ இந்த உலகத்தில் ஒரு பெரிய வெற்றி பெற்றவன் போல அறை கூவல்களை முகநூல், மெயில் மற்றும் ட்விட்டர் மூலம் உலகுக்கு பறைசாற்றி கொண்டு இருந்தேன் ரயில் புறப்பட்டதை கூட அறியாமல்.  தீடீர் என்று வண்டி நிற்கும் உணர்வு வந்தவுடன் லேசாக கண்ணாடி வழியாக வெளியில் பார்த்தேன். ஆம் ரயில் நின்று கொண்டு தான் இருந்தது, அது தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டவுடன் ஒரு மங்கை எதிரில் நின்றாள்.  அவள் முகத்தை நான் பார்க்கவில்லை, முதலில் பார்த்தது அவள் எலுமிச்சை நிறம் உள்ள சின்ன இடையை தான்.  என்ன ஒரு கலர், நான் மட்டும் வைரமுத்து மாதிரி கவிதை எழுதுபவனாக இருந்தால் இந்த நேரத்தில் ஒரு பத்து கவிதையாவது எழுதியிருப்பேன் என மனதில் நினைத்து கொண்டேன்.  ஆனால் அப்படியும் எனக்கு ஒரு கவிதை தோன்றியது.

கற்பனையில் கவிதை எழுதுவது அழகு

நிஜத்தை கற்பனையில் எழுதுவது பேரழகு

ஆம் இவள் பேரழகு தான் –

மடியாத உடம்பில் நாம் அழகு

மடியாத இடையில் இளமை அழகு

இந்த கவிதை என் மனத்திரையின் முன் வந்து போனது, அப்போது தான் அவள் முகத்தை பார்த்தேன், நல்லா ரோஸ் கலர் பவுடர் போட்டு, உதடுக்கு சாயம் பூசி அதுவும் ஒரு செர்ரி பலம் போல சிவந்தும் இருந்தது.  அவள் சேலை தான் கட்டி இருந்தால், ஆனால் உடம்பில் உள்ள அங்கங்கள் அனைத்தும் கண்ணாடி போல எதிரில் உள்ளவர்களுக்கு தெரிவது போல இருந்தது.  ஒரு முறை அவள் மொத்த அழகையும் பார்த்து விட்டு ஒரு சின்ன சந்தேகம் வந்தது.  உடனே சந்தேகத்தை வெளியே காட்டாமல் ஒரு சுவீட் எடுத்து அவளுக்கு தந்து எனக்கு ஆண் பிள்ளை பிறந்த விசயத்தை அவளிடமும் கூறினேன். அவளும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு சுவீட்டை எடுத்தாள்.

அவளிடம் மெதுவாக கேட்டேன், நீங்க எங்க வேலை பார்க்கிறீர்கள்  என்று?  ஒரு நீண்ட சிரிப்புடன் நீங்களே கண்டுபிடியுங்கள் என்று கூறினாள்.

உடனே நான் ஒரு கம்பெனி பெயரை சொல்ல, அவள் இல்லை என பதிலளித்தாள், மறுபடியும் விமான பணி பெண் என கூற, நான் என்ன அவ்வளவு அழகா என எதிர் கேள்வி கேட்டாள்.  நீங்கள் ஒரு டாக்டர்?

நான் டாக்டரா?? நல்லா இருக்குது உங்க வியூகம்.  ஓகே உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, நான் என்னை பற்றி சில குறிப்புகளை தருகிறேன். அதை வைத்து நான் செய்யும் வேலையை உங்களால் கண்டு பிடிக்க முடியுதா என்று பார்க்கலாம் என்று கூறினாள்?   உடனே நான் சம்மதம்  என்று சொல்வது போல தலையை மட்டும் அசைத்தேன்.

உலகத்தில் உள்ள ஒரு மூத்த தொழில்; மாதவி செய்த தொழில், கற்பை பற்றி கலங்காத தொழில், இளைஞர் முதல் கிழம் வரை வரும் இடம், நான் ஒரு துறவி இல்ல, ஆனால் ஒரு துறவியால் கூட கொடுக்க முடியாத சந்தோசத்தையும், மன அமைதியையும் எங்களால் தர முடியும்.  நான் ஒரு டாக்டர் இல்ல, ஆனால் அடிக்கடி டாக்டரிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்யும் ஒரு நோயாளியும் கூட; பெருத்த பண முதலைகள் முதல் அறிஞர் வரை என்னிடம் வந்தால், என் அழகிடம் சிறைதான் என்று கூறி விட்டு வாய்விட்டு சிரித்தாள்.

இன்னுமா கண்டுபிடிக்கவில்லை என்று கேட்டு விட்டு, எனது  பதிலை கூட எதிர்பார்க்காமல், அவளே அடுத்த குறிப்புக்கு சென்றாள்,  போலீஸ்க்கு பிடிக்காத வேலை, இளமை  உள்ள வரை மட்டும் செய்ய முடிந்த வேலை, அந்த காலத்தில் ராஜவீதிகளில் நடந்த தொழில், இன்று சில சிவப்பு நிற விளக்கு உள்ள வீடுகளில் மட்டும் யாருக்கும் தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியவர்க்கு மட்டும் தெரிந்து சில அழுகைகளுடன், சிலரின் தேவைகளுக்குமாக நடக்கும் தொழில் எது என்று கேட்டாள்.

ஓ அப்படின்னா நீ     நீ…..நீ…… நீ………….. நீங்க என்று ஒரு நீண்ட   இழுவை இழுத்து ஒரு பாலியல்  தொழிலாளியா? என்று கேட்டேன்.  ஆம் என்று சொல்லிவிட்டு கல கலவென்று சிரித்தாள்.  நீங்க எப்படி இந்த தொழிலில் என்று கேட்டேன்.  எல்லாரையும் போல நான் மட்டும் என்ன விதி விலக்கா? எதோ வெளிச்சத்தை தேடி வந்து வாழ்க்கையை முடிக்கும் ஈசல் போல தான் என் வாழ்க்கையும்.  சென்னையில் ஒரு வீட்டில் வேலை என்று சொல்லி அழைத்து வந்து இந்த கிணற்றில் விழுந்து விட்டேன்.

சரி ஒரு நாளைக்கு  எவ்வளவு நேரம் வேலை என்று கேட்டேன்?, அது கணக்கிட்டு சொல்ல முடியாது.  வாரக்கடைசியில் அதிகம் வேலை இருக்கும்.  வாரநாட்களில் கொஞ்சம் கம்மியாகவே இருக்கும்.  சில நேரம் சில அரசியல்காரர்கள் பங்களா சென்றால் இடைவிடாமல் வேலை இருக்கும், நிறைய அதிகாரிகள் வருவார்கள். ஆனால் நல்ல சாப்பாடு கிடைக்கும், சில அதிகாரிகள் என் கையிலும் கொஞ்சம் பணமும் தருவார்கள். வார இறுதியில் குடிகாரர்கள் தான் அதிகம், டார்ச்சர் தாங்க முடியாது என சொன்னாள்.

சே! உங்களுக்கு லீவே கிடையாதா என்று கேட்டேன்?

ஏன் கிடையாது அது தான் கடவுளே பார்த்து மாதத்திற்கு மூன்று நாள் லீவு கொடுத்துள்ளார் என்று விரத்தியுடன் பதில் கூறினாள்; பதிலை கேட்டவுடன் என்னால் எதுவும் பேச முடியவில்லை.  ஒரு அரை  மணி நேரம் அமைதியாக இருந்தேன்; பின் எழுந்து சென்று ஒரு தம் போட்டுவிட்டு மறுபடியும் வந்தேன்.

என்ன ஒன்னும் பேசாமல் அமைதியாக வருகிறீர்கள் என்று மீண்டும் என்னை பேச்சுக்கு இழுத்தாள்;

எனக்கு மனசு சிறிது லேசானது. அப்படி ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டு ஒரு மாதம் எவ்வளவு கிடைக்கும் என்று கேட்டேன்.

என்ன மிஞ்சி மிஞ்சி போனா ஒரு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும் என்று கூறினாள்.

என்ன இவ்வளவு தானா என்று கேட்டேன்?

இல்லை கிட்டதட்ட ஒரு முப்பதாயிரம் கிடைக்கும், புரோகர் கமிசன், போலீஸ் மாமுல், ஆட்டோ செலவு, மேக்கப் செலவு, மருத்துவ செலவு என உங்கள் வீட்டு மளிகை சாமான் லிஸ்டை போல ஒரு பெரிய லிஸ்டே உள்ளது என சலிப்புடன் கூறினாள். அதுவும் சில நேரம் போலீஸ் கேசில் பிடித்துவிட்டால் ஒரு சில ஆயிரம் தண்டமாபோகும், அது மட்டுமில்லாமல் ஒரு இரண்டு நாளைக்கு வேலையும் பார்க்கமுடியாமல் அந்த போலீஸ்காரர்கள் செய்யும் இம்சையை யாருக்கிட்ட சொல்ல என கோபத்துடன்  சொன்னாள்.

ஏன் இதை எல்லாம் நீங்க ஒரு பத்திரிகைகாரர்கள் கிட்ட சொல்ல கூடாது என்று கேட்டேன்?.

ஓ! அது ஒன்று தான் குறைச்சல், நிறைய  பத்திரிகைகாரர்கள் வந்து எங்க வாழ்க்கையை கேட்டும் படம் பிடித்தும் அவர்கள் டிவியிலும் பேப்பரிலும் எழுதி பணம் சம்பாரிக்க தான் எங்க வாழ்க்கை கதை உதவுது என்று ஒரு வெறுப்புடன் சொன்னாள்.

இருவரும் தூங்கமல் பேசி கொண்டே இருக்கும்போது வண்டி திருச்சியை அடைந்தது, நான் மெதுவாக எழுந்து கீழே இறங்கி டீ வாங்கினேன், அவளும் பின்னாடியே கீழே இறங்கி வந்தாள்.  இருவரும் டீ வங்கி கொண்டு திரும்பும் போது ஒரு சிறுவன் பேப்பர் பேப்பர் என்று அந்த குளிரிலும் விற்று கொண்டு இருந்தான்.  அவனிடம் ஒரு பேப்பர் வாங்கி கொண்டு மீண்டும் ரயிலில். ஏறினோம்.   இப்ப தான் அவள் கிட்ட முதன் முதலா பெயர் என்ன என்று கேட்டேன்.  அவள் கல்பனா என்று கூறினாள்.  இங்கபாரு கல்பனா நான் இதுவரைக்கும் யாருக்கும் எந்த ஒரு அறிவுரையும்  சொன்னது கிடையாது. இப்பவும் உனக்கு சொல்லபோவதும் இல்லை.  ஆனால் நம்ம செய்கின்ற குற்றத்திற்கு இந்த சமுதாயத்தை குறை சொல்ல கூடாது.  இந்த பேப்பர் விற்கும் பையன் மட்டும்  சமுதாயத்தை குறை சொல்லி கொண்டு ஒரு திருட்டு தொழிலில் ஈடுபடலாம், ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. அவனுக்கும் அவன் குடும்பத்தில்  ஆயிரம் பிரச்னை இருக்கலாம்.  கடைசியாக ஒன்னு மட்டும் சொல்லுகிறேன்,  மறதியை போல ஒரு மாமருந்து இல்லை இந்த உலகத்தில், காலங்களை போல நம்ம காயத்திற்கு ஒரு களிம்பும் கிடையாது,

ஒரு சினிமா பாடல் போல “காலங்கள் ஓடும்; இது கதையாக கூடும்; கண்ணீர் துளியின் ஈரம் காயும்” என்று சொல்லி விட்டு நிறுத்திவிட்டேன்.

ஒரு அரை மணி நேரம் அவள் எதுவும் பேசவில்லை, சில கண்ணீர் துளிகள் அவள் கண்களில் இருந்து வரமட்டும் காத்து கொண்டு இருந்தன.  கண்ணீர் துளிகள் வரும் முன் அவள் இறங்கும் மதுரை ஸ்டேஷன் வந்தது. அவள் தனது உடமைகளை எடுத்து  கொண்டு இறங்கும் போது மிக்க நன்றி என்று மட்டும் சொல்லி கொண்டு  கை குலுக்கினாள், கை குலுக்கிவிட்டு கையில் ஒரு முத்தம் இட்டு இறங்கி சென்றாள்.

அவள் தந்த அந்த ஒரு முத்தம் எனக்கு என் தங்கையிடம் இருந்து கிடைத்தது போல இருந்தது, அப்போதே நினைத்தேன் அவள் பரிசுத்தம் ஆகிவிட்டாள் என்று ஏனென்றால் அவள் இப்பொழுது தந்த முத்தம் சுத்தமாகவும், பரிசுத்தமாகவும் இருந்தது.

அவள் இறங்கி சென்றவுடன் வாங்கி வந்த பேப்பரை முழுவதுமாக படித்து முடிப்பதற்குள் ஊர் வந்துவிட்டது. ஊருக்கு சென்றவுடன் எனது குழந்தைக்கும், மனைவிக்கும் மாறி மாறி முத்தம் தந்தேன்.  ஒரு நாலு நாள் ஊரில் இருந்து விட்டு மறுபடியும் சென்னை வந்தேன். சென்னை வரும் போது தான் யோசித்தேன், அவளிடம்  போன் நம்பர் கூட வாங்கவில்லை என்று.

மறுபடியும் ஒரு மாதம் கழித்து மனைவியை அழைத்து வர ஊருக்கு சென்றேன், ஆனால் இந்த முறை நான் ஆபீஸ் வேலை விசயமா பெங்களூர் சென்று விட்டு  ஊருக்கு வந்தேன். பெங்களூர்லில் இருந்து எனது ஊருக்கு டைரக்ட் வண்டி எதுவும் கிடையாது, அதனால் மதுரை வரை புக் செய்து வந்து கொண்டு இருந்தேன்.

இந்த முறை என்னுடன் வந்தது ஒரு கல்லூரி பெண், வண்டி கிளம்பிய நேரத்தில் இருந்து ஒரே போன் மற்றும் மெசேஜ் தான், ஒரே சினுகல் வேற இதுல.  எதுவும் பேசாமல் எழுந்து சென்று ஒரு தம் அடித்து விட்டு மறுபடியும் பார்த்தேன், அதே சினுகல் தான்.  உடனே லைட் ஆப் பண்ணிவிட்டு தூங்க முயற்சி செய்து சிறிது நேரத்தில் உறங்கினேன்.

உறங்கியதில் பயண களைப்பு தெரியாமல் மதுரை வந்து சேர்ந்தேன்.   மதுரை வந்ததும் பெட்டிகளை எடுத்து கொண்டு ரயில்வே ஸ்டேஷன்க்கு வெளியே வந்தேன்.

நிறைய பெண்கள் மதுர மதுரமல்லி  மதுரமல்லி என்று கூவி கூவி அழைத்தனர்.  அதில் ஒரு பெண் தட்டு நிறைய மதுரை மல்லி வைத்து நடுவில் ஒரு ஆதி பராசக்தி போட்டோ ஒன்றும் வைத்திருந்தாள்; அது என்னை ஈர்த்தது. ரொம்ப நாளைக்கு அப்பறம் வீட்டுக்கு போறோம், அதுவும் மனைவிக்கு பிடித்த மதுரை மல்லி என்று நினைத்து கொண்டு ஒரு இரண்டு முழம் பூ தாமா? என்று கேட்டேன்; உடனே அந்த பெண்மணி நிமிர்ந்தாள், அவள் கழுத்தில் ஒரு சிவப்பு கயிறில் ஆதி பராசக்தி படம் இருந்தது; கொஞ்சம் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தேன்.

அதே கல்பனா ……..

ஆனால் கரிய முகத்துடன்; அவளிடம் எதுவும் பேசாமல் பூ வங்கி விட்டு வேகமாக நடந்தேன், மல்லிகையை விட அவள் செய்கை மணம் வீசியது.

Share This Book