ராஜா வீட்டில் நிறைய பண வசதி இருந்தும் தினமும் காரில் ஆபீஸ் செல்லாமல் ரயிலில் தான் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் வரை ஆபீஸ்க்கு செல்வான்.  அவனது அப்பாவும், அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.  பிறந்தது  முதல் இருபது வருடம் காரில் தானே சென்றேன், இப்பயாவது என்னை என் விருப்ப படி செயல் படவிடுங்கள் என்று கூறுவான்.

அன்று காலையில் அவசரம் அவசரமாக குளித்துவிட்டு வீட்டில் உள்ள சாமி படங்களை கும்மிட்டு விட்டு வழக்கம் போல அலுவலகம் செல்ல கிளம்பும் போது, ராஜாவின் அம்மா சாப்பிட்டு தான் போக வேண்டும் என சொல்லிக்கொண்டே தட்டில் மல்லிகைபூ இல்ல மல்லிகை பூ போல உள்ள இட்லிகளை வைத்தாள், வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே கட கட என சாப்பிட்டான்.

வேகமாக பைக்கை உதைத்து வீட்டில் இருந்து புறப்பட்டான், போகும் வழியில் நடக்க முடியாமல் ரோட்டில் சென்ற ஒரு பெரியவரை வண்டியில் ஏற்றி கொண்டு பேருந்து நிலையம் சென்று அவரை இறக்கிவிட்டு ரயில் நிலையம் வந்தான்.  ரயில் நிலையத்தில் வண்டியை காப்பகத்தில் நிறுத்திவிட்டு, வேகமா நடந்தான் இல்ல ஓடினான், கடைசியில் ஒரு வழியாக பிளாட்பாரத்தை அடைந்தான்.

ரயில் வழக்கத்தை விட கூட்டமாக வந்தது,  ஏதோ சொர்க்கத்திற்கு போகும் வாசல் போல எண்ணி ரயில் வாசலை எல்லோரும் சேர்ந்து அடைத்தனர், அந்த சமயத்தில் உள்ளே இருந்தும் சிலர் நரகத்தில் இருந்து வருவது போல கஷ்டப்பட்டு வந்தனர்.  இவன் பொறுமையாக அனைவருக்கும் வழி விட்டு கொண்டு இருந்தான், கடைசியில் கஷ்டப்பட்டு ரயில் நகரும் போது படியில் தான் இடம் கிடைத்தது.  ரயில் நகரும் போது வரும் காற்று இவனை தாலாட்டியது  இளையராஜா  பாடல்கள் போல. ரயில் தாம்பரம் வந்தவுடன் கூட்டம் சிறிது குறைந்தது. இவன் கொஞ்சம் உள்ளே சென்று நின்றான்.

முதலில் உலக வரைபடம், செய்தித்தாள் விற்பனை செய்யும் பையன் வந்தான், ஒவ்வொருவரிடமும் சென்று காட்டி விற்பனை செய்தான். அடுத்து பட்டாணி , சுண்டல் என்று ஒரு ஒலி மட்டும் கேட்டது, ஒரு வயசான தாத்தா கம்பீர குரலில் சுண்டலை விற்பனை செய்தார்.

அடுத்து வண்டி குரோம்பேட்டையில் வந்து நின்றது, அப்போது பெட்டியில் இருந்த சில கல்லூரி மாணவர்களும்,  மாணவிகளும் இறங்கினர். ராஜாவிற்கு அமர இடமும் கிடைத்தது அதுவும் ஜன்னல் ஓரத்தில்.   அடுத்து வண்டி பல்லாவரம், திரிசூலம் கடப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துகொண்டு வந்தான்.

ரயில் மீனம்பாக்கம் நிறுத்தத்தை அடையும் போது ஒரு பெண் கைகுழந்தையுடன் வந்து அனைவரிடமும் யாசகம் கேட்டாள். அனைவரும் தங்களால் முடிந்த ஒரு ரூபாய்  நாணயங்களை போட்டனர், ராஜாவும் அவன் பங்கிற்கு ஒரு ரூபாய் போட்டான்.  அடுத்து தன் பையை திறந்து ஒரு குமுதம் வாரஇதழை எடுத்து புரட்டினான், வழக்கம் போல அதுவரை அருகில் வேடிக்கை பார்த்தவர், இவன் படிக்கும் பக்கங்களை தனது காந்த பார்வையால் மேய தொடங்கினார்.  சிறிது நேரம் கழித்து, அவர் பார்ப்பதை பார்த்து விட்டு அவரிடமே வாரஇதழை  நீட்டினான்.  அவரும் சந்தோசமாக வாங்கி படிக்க ஆரம்பித்தார், ராஜா மீண்டும் ஜன்னலை நோக்கினான்.  வண்டி பழவந்தாங்கல் கடந்து கிண்டியை அடைந்தது.  கிண்டியில் ‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணம்மோ’  பாடலை இளையராஜா ஜானகியை விட அருமையாக இரு மாற்று திறனாளிகள் பாடிக் கொண்டே யாசகம் கேட்டு வந்து கொண்டு இருந்தனர்.  அனைவரும்  காது இருந்தும் கேட்காமல், சிலர் ஒரு ரூபாய் கூட போடாமல்  முகத்தை வேற வேற பக்கம் திருப்பினர், அவர்களுக்கு பார்வை தெரியாது என தெரியாமல்.

அடுத்து வண்டி சைதாபேட்டையை அடைந்தது, அப்போது சில திருநங்கைகள் அந்த பெட்டியில் ஏறினார்கள்,. ரோசாப்பு நிறத்தில் சாயத்தை இதழ்களுக்கும், மூன்றாம் பிறை நிலவு போல   மார்பகங்கள் தெரியும் படி ரவிக்கையும், உள்ளங்கை நெல்லிக்காயை போல தொப்புளும் தெரியும் படி, இல்ல மார்புக்கு நடுவில் விளக்கின் ஒரு திரியை போல கிடந்தது சேலை.   இந்த சமுதாயத்தில் எந்த வேலையும் கிடைக்காமல், தனது வயிற்று பிழைப்புக்காக எல்லோரிடமும் யாசகம் கேட்டனர்.

அதில் ஒரு வயசான திருநங்கை ‘மாமா காசு கொடு’, ‘மாமா காசு கொடு’ என அனைவரிடமும் கேட்டாள், ஒரு இளவயது திருநங்கை அண்ணா காசு கொடு, அண்ணா காசு கொடு என கை களை தட்டி தட்டி கேட்டாள்.  இதுவரை ரயிலில் வந்த யாருக்கும் காசு போடாதவர்களும் கூட திருநங்கைகளுக்கு காசு போட்டனர்.  ரயிலில் இருந்த சில பெண்கள் கூட நாணயங்களை போட்டனர்.  அவர்களில் இரு இளவயது திருநங்கைகள் ராஜா இருக்கும் இடம் நோக்கி வந்தனர். அதில் ஒரு திருநங்கை அண்ணா காசு கொடு, காசு கொடு என கைகளை தட்டி தட்டி கேட்டாள். உடனே  ராஜா தனது சட்டை பையில் கையை விட்டு  நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து கொடுத்தான்.  உடனே அதை வாங்கிய திருநங்கைகள் அவன்  தலையில் கை வைத்து ஆசிர்வதித்துவிட்டும், கண்ணத்தில் தட்டியும் சென்றனர்.  பின்பு அந்த வயசான திருநங்கைகளும் வந்து ஆசிர்வதித்துவிட்டு சென்றனர்.

ரயில் வண்டி அடுத்து நுங்கம்பாக்கம் வந்தவுடன், அனைத்து திருநங்கைகளும் இறங்கினர்.  ராஜாவின் பக்கத்தில் இருந்த பெரியவர் என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு ரூபாய் கொடுக்கிறாய் என கேட்டார். அதுக்கு ஒரு புன்சிரிப்பு மட்டும் பதிலாக கொடுத்தான்.  அடுத்து இவன் இறங்கும் எக்மோர் ஸ்டேஷன் வந்தது.  இறங்கி சுரங்க பாதையில் செல்லும் போது, அந்த பெரியவர் சொன்னது மட்டும் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது,

” என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு  ரூபாய் கொடுக்கிறாய்”

“என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு  ரூபாய் கொடுக்கிறாய்”

“என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு  ரூபாய் கொடுக்கிறாய்”

 

தனது பர்சை எடுத்து அதில் உள்ளே இருந்து ஒரு போட்டோவை எடுத்தான், அதை பார்த்தவுடன் கண்ணீர் வந்தது; அது திரு.ராஜா, திருநங்கை ராணியாக இருந்த போது எடுத்த போட்டோ,  நம் வீட்டில் மட்டும் வசதி இல்லாமல் இருந்தால் நாமும் இப்படித்தான் இருப்போம் என்று எண்ணி கண்ணீர் விட்டான்.

 

 

Share This Book